நாட்டின் கோவிட்-19 பரவல் தன்மை குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆய்வு மேற்கொண்டு மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த சுற்றறிக்கையை ஒன்றிய உள்துறை செயலர் அஜய் குமார் பல்லா, மாநில தலைமை செயலர்களுக்கு அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில் கூறியதாவது, 'நாட்டில் தினசரி கரோனா பாதிப்பும், சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக குறைந்துவருகிறது. இருப்பினும் ஒரு சில மாநிலங்களில் வட்டார அளவில் பரவல் தென்படுகிறது.
எனவே, கரோனா தொடர்ந்து நாட்டின் பொது சுகாதாரத்திற்கு சவாலாக விளங்குகிறது. கரோனா பரவல் குறைந்துவிட்டதாக எண்ணி மக்கள் அலட்சியப் போக்கு காட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன. குறிப்பாக இனிவரும் காலங்களில் பண்டிகைகள் அதிகம் வருவதால் மக்கள் அதிகளவில் கூடுவதற்கான சாத்தியங்கள் அதிகம்.
இந்த காலகட்டங்களில் மக்கள் கோவிட்-19 விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்றால் தொற்று எண்ணிக்கை உயர வாய்ப்புகள் அதிகம். மாநில, மாவட்ட நிர்வாகங்கள் மருத்துவமனையில் படுக்கை வசதி, ஐசியு நிலவரம் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்' என அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காங்கிரஸை காப்பாற்றினால் நாட்டை காப்பாற்ற முடியும் - கனையா குமார்