டெல்லி: நாடு முழுவதும் கடந்த மாதம் 30ஆம் தேதி ராமநவமி கொண்டாடப்பட்டது. இதையொட்டி மேற்கு வங்க மாநிலம், ஹவுரா மாவட்டம், காசிபாரா பகுதியில் பேரணி சென்றபோது, இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் ஃபதேபூர் பகுதியில், ராமநவமியன்று பேரணி நடைபெற்றது. அப்போது பேரணியில் சென்றவர்கள் மீது ஒரு தரப்பினர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதேபோல் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் கிராத்புரா பகுதியில், இருதரப்பினர் இடையே மோதல் வெடித்தது. கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன், வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்நிலையில் நாளை (ஏப்ரல் 6) அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நேற்று (ஏப்ரல் 4) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இக்கூட்டத்தில் உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா, துணை ராணுவப்படை அதிகாரிகள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், "அனுமன் ஜெயந்தியின் போது, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க அந்தந்த மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வகுப்புவாத கலவரங்கள் ஏற்படாத வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது அவசியம். வன்முறையில் ஈடுபட முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை டுஎடுக்கப்பட வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
ராமநவமி பேரணியின் போது மேற்குவங்க மாநிலத்தில் வன்முறை ஏற்பட்ட நிலையில், அதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில அரசுக்கு, உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.