அவுரங்காபாத்: குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் "சேவா" என்ற பெண்கள் சுய உதவிக்குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவின் நிறுவனரும் காந்தியவாதியுமான எலா பட், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். எலா பட்டும், அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் நீண்ட கால தோழிகள் என்று கூறப்படுகிறது. இதனால், எலா பட்டிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஹிலாரி கிளிண்டன் கடந்த 5ஆம் தேதி குஜராத் வந்தார். பின்னர் குஜராத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் பயணமாக ஹிலாரி கிளிண்டன் இன்று(பிப்.7) மகாராஷ்டிரா வந்துள்ளார். அகமதாபாத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் அவுரங்காபாத் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு மாநில அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹிலாரி கிளிண்டன் வருகையையொட்டி விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஹிலாரி கிளிண்டன் வரும் 9ஆம் தேதி வரை அவுரங்காபாத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குல்தாபாத்தில் தங்கியுள்ள கிளிண்டன், நாளை அங்குள்ள புகழ்பெற்ற கிரிஷ்ணேஷ்வர் கோயில், எல்லோரா குகைகள் உள்ளிட்டவற்றை பார்வையிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.