நாஷிக்: மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக்கில் தனியார் பெண்கள் காப்பகத்தில் இருந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், காப்பகத்தின் உரிமையாளரை கடந்த 26ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காப்பகத்தில் இருந்த ஐந்து சிறுமிகளை கடந்த சில ஆண்டுகளாக காப்பக உரிமையாளர் பாலியல் வன்கொடுமை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், போலீசாரின் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன. காப்பக உரிமையாளர் சமூக சேவை என்ற பெயரில் பல இழிவான செயல்களை செய்து வந்துள்ளார். அந்த நபர், ஒரு புறம் சமூகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களுடன் புகைப்படம் எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, கவனத்தை ஈர்த்துள்ளார். அதன் மூலம் தான் சமூக சேவகன் என காண்பித்து நன்கொடைகள் பெற்றுள்ளார்.
மறுபுறம் காப்பகத்தில் உள்ள சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். காப்பகத்தில் சிறுமிகள் குளிப்பதை வீடியோவாக பதிவு செய்து, அதனை வைத்து மிரட்டி, சிறுமிகளை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுவரை 6 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சிறப்புக் குழு அமைத்து விசாரணை நடத்தி, 7 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க, மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: காப்பக சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்துவந்த உரிமையாளர் கைது