மெட்டா நிறுவனத்தின் இந்திய தலைவராக சந்தியா தேவநாதன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, இந்தப்பொறுப்பில் இருந்த அஜித் மோகன் விலகியதால், இவருக்கு இந்த பதவி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்தின் வணிகம் மற்றும் வருவாயினை பெருக்குவதற்கான பணிகளில் ஈடுபடவுள்ள சந்தியா தேவநாதன், வரும் 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி தனது புதிய பதவிக்கு மாறுவார் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
சந்தியா தேவநாதன் உலகளாவிய வணிகத்தலைவராக 22 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். மேலும் வங்கி, பேமண்ட்ஸ் (Payments) ஆகியவற்றில் சர்வதேச அளவில் அனுபவம் வாய்ந்தவர்.
இந்தியாவைச்சேர்ந்த இவர், கடந்த 2016-ல் மெட்டாவில் இணைந்து சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் நாடுகளில் மெட்டா நிறுவனத்தின் வணிகப்பிரிவுகளை கட்டமைக்கவும், தென்கிழக்கு ஆசியாவில் மெட்டாவின் இ-காமர்ஸ் முயற்சிகளை உருவாக்கவும் உதவியாக இருந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் 11,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது. இந்தச் சூழலில் சந்தியா தேவநாதன் மெட்டா நிறுவனத்தின் இந்தியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அமேசானில் ஆட்குறைப்பா? : 10,000 ஊழியர்களின் வேலை பறிபோகும் அபாயம்...!