கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் நமிதா கோஷல் என்ற 90 வயது மூதாட்டி தனது மகளுடன் வசித்து வந்தார். மூதாட்டியின் மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே, கணவரை இழந்த மூதாட்டி வறுமையில் வாடி வந்தார்.
இந்த நிலையில், இன்று(பிப்.13) மூதாட்டியின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் மூதாட்டியின் மகளிடம் கேட்டுள்ளனர். அப்போது தனது தாயார் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், அவரது உடல் வீட்டிலேயே இருப்பதாகவும் மகள் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூதாட்டியின் மகளை காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூதாட்டி நீண்ட நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். மூதாட்டி நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும், நிதி நெருக்கடி இருந்ததால் அவரால் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் மூதாட்டி நீண்ட காலமாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்றும் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மூதாட்டி இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.