ஜம்மு-காஷ்மீரில் அமலிலிருந்த ரோஷ்னி சட்டத்தை அம்மாநில நிர்வாகம் ரத்துசெய்தது. இதனையடுத்து, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க நவம்பர் 27ஆம் தேதி புட்கம் பகுதிக்குச் செல்ல ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், முப்தி மீண்டும் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள மெஹபூபா முப்தி, "மத்திய அரசும், காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகமும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் மக்கள் மீது அடக்குமுறையையும், அட்டூழியங்களையும் நடத்துகிறது. ஜனநாயாக ரீதியான எந்தவொரு எதிர்ப்பையும் தடுக்க மத்திய அரசு சட்டவிரோத தடுப்புக்காவலை ஏவுகிறது.
நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள புட்காமிற்குச் சென்று பார்வையிட இருந்த நிலையில், நான் மீண்டும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன். ஜம்மு-காஷ்மீர் மக்கள் மீது தொடர்ந்து அடக்குமுறையையும், அவதூறுகளையும் ஏற்படுத்த மத்தியில் ஆளும் பாஜக அரசு விரும்புகிறது" என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதி வழங்கிய அரசியலமைப்பின் 370ஆவது பிரிவை 2019ஆம் ஆண்டு மத்திய அரசு ரத்துசெய்தது. இந்த விவகாரம் தொடர்பாக மெஹபூபா முப்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். அப்போது, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை காரணமாக மெஹபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பேரணிகள் மூலம் மக்களை கொல்லும் பாஜக - மம்தா பானர்ஜி