உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த, நாசாவின் பெர்சவரன்ஸ் என்ற விண்கலம், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளது. அதில், இந்திய-அமெரிக்க விஞ்ஞானியான சுவாதி மோகன் என்பவர்தான், விண்கலத்தை கட்டுப்படுத்தி தரையிறக்குவதில் முக்கியப் பங்காற்றியவர். பெர்சவரன்ஸ் விண்கலத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கியதிலிருந்து கடந்த ஏழு ஆண்டுகளாக, அத்திட்டத்தில் அவர் பணியாற்றி வருகிறார்.
செவ்வாய் கிரகத்தில் விண்கலத்தை தரையிறக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, இருப்பினும், சுவாதி அதில் சாதித்து காட்டியுள்ளார்.
சுவாதி தன்னுடைய ஒரு வயதில் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். தனது இளம் வயதை, வடக்கு விர்ஜினியா-வாஷிங்டன் பகுதியில் கழித்துள்ளார். 9ஆவது வயதில், ஸ்டார் ட்ரெக் என்ற அனிமேஷன் சீரிஸில் வரும் பிரபஞ்சத்தின் மற்ற பகுதிகளைப் பார்த்து வியப்படைந்துள்ளார். அதேபோல், புதிய பகுதிகளை கண்டுபிடிக்க வேண்டும் என உத்வேகம் பெற்றுள்ளார்.
குழந்தைகளுக்கான மருத்துவராக வர வேண்டும் என்று இளம் வயதில் லட்சியத்துடன் இருந்த சுவாதியை, இயற்பியல் வகுப்புகளும், ஆசிரியர்களும் பொறியியல் படிப்பை நோக்கி நகர்த்தியுள்ளனர்.
செவ்வாய கிரகத்திலிருந்து, பாறைகளை எடுத்துவந்து அங்குள்ள வாழ்க்கை முறையை ஆராயும் திட்டத்திலும் சுவாதி பணியாற்றி வருகிறார். நாசா சனி கிரகத்தில் காசினி விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டுவருகிறது. அப்பணிகளிலும் சுவாதி ஈடுபட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.