உத்தரப் பிரதேச மாநிலம் தானா மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணும், சாஸ்திரி நகரை சேர்ந்த ஆணும் காதலித்து வந்துள்ளனர். வேற்று மதத்தைச் சேர்ந்தவரை காதலித்த காரணத்தால் பெண்ணின் குடும்பத்தார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி மறுத்த நிலையில், அப்பெண்ணும், ஆணும் ரிஷிகேஷூக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, இளம்பெண்ணை ஏமாற்றி கூட்டிச் சென்றதாக சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல், கடத்திச் சென்றுவிட்டதாக ஆணின் குடும்பத்தாரும் புகார் அளித்தனர். இரு வீட்டார் புகாரையும் பதிவு செய்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
காதல் ஜோடி ரிஷிகேஷில் இருப்பதை அறிந்துகொண்ட காவல் துறையினர், அவர்களை மீட்டு உத்தரப் பிரதேசத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர், அப்பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 18 வயது நிரம்பிய காரணத்தால் அப்பெண் விரும்பியபடியே தனது கணவருடன் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
காவல் துறையின் பலத்த பாதுகாப்புக்கு இடையே, இருவரும் ஆணின் வீட்டிற்கு சென்றனர். முன்னதாக, காவல் நிலையத்தில் உள்ள அனைவருக்கும் இருவர் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.