போபால்: மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று (ஜூலை 27) கரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாமில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான 30 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசி மருந்துகளை ஒரே சிரிஞ்ச் மூலம் ஜிதேந்திரா என்னும் அலுவலர் செலுத்தி உள்ளார்.
இதனைக்கண்ட ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியபோது, தன்னிடம் மாவட்ட மருத்துவ அலுவலர் ஒரே சிரஞ்ச் மட்டுமே கொடுத்து, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியதாக தெரிவித்தார். இந்த தகவலையறிந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே ஜிதேந்திரா தலைமறைவானார். இதுகுறித்து கோபால் கஞ்ச் போலீசார் தரப்பில், ஜிதேந்திரா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை தேடி வருகிறோம். அதோடு மாவட்ட தடுப்பூசி அலுவர் ராகேஷ் ரோஷன் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எக்ஸ்பிரஸ் ரயிலில் பாம்பு - பயணிகள் பீதி!