பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் மூவர், மூத்த பத்திரிகையாளர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்கள் என 300க்கும் மேற்பட்ட இந்தியர்களின் போன்கள், இஸ்ரேலிய நிறுவனம் ஒன்றால் ஒட்டு கேட்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்தியர்களை உளவு பார்க்கிறதா பெகாசஸ்
இந்தத் தகவல் திருட்டில் இஸ்ரேலிய நிறுவனமான பெகாசஸ் (Pegasus) நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்தத் தகவல்கள் அனைத்தும் அரசுக்கு விற்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், இதை மத்திய அரசு மறுத்துள்ளது. இவ்விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.
யாரையும் உளவு பார்க்கவில்லை
இந்நிலையில், பெகாசஸ் செயலி மூலம் யாரையும் உளவு பார்க்கவில்லை என நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "தொழில்நுட்ப ரீதியாக சம்பந்தப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்யாமல் முடிவு செய்ய இயலாது. இந்தியாவில் சட்டவிரோதமாக உளவு பார்த்தல் என்பது சாத்தியமில்லை. அங்கீகாரமற்ற கண்காணிப்பு ஒருபோதும் நடைபெறாது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முதல் நாள் இரவு, ஒரு இணையதளத்தில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. பெரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தி, நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பு வெளியானது தற்செயலானது அல்ல" எனத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழில் பதவியேற்ற விஜய் வசந்த்!