கோவிட்-19 தடுப்பூசி தொடர்பாக எந்தவொரு புதிய ஆர்டர்களையும், மத்திய அரசு வழங்கவில்லை என ஊடக அறிக்கைகளில் வருவது தவறானவை என மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சீரம் நிறுவனத்திடம் 100 மில்லியன் டோஸ் தடுப்பூசியும், பாரத் பயோடேக் நிறுவனத்திடம் 20 மில்லியன் டோஸ் தடுப்பூசியும், கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஆர்டர் செய்திருந்ததாகவும், அதன் பிறகு எவ்வித ஆர்டரும் செய்யவில்லை என, ஊடக அறிக்கைகளில் தகவல் பரவி வருகிறது.
இது முற்றிலும் தவறானது. அவை உண்மை கிடையாது. கடைசியாக, 10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஆர்டர் செய்திருந்தோம். மே 3 வரை 8.7 கோடி தடுப்பூசிகள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இதற்காக, சீரம் நிறுவனத்திற்கு 1,732.50 கோடி ரூபாய் முன் பணத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
அதே போல, 5 கோடி கோவாக்சின் தடுப்பூசிக்காகப் பாரத் பயோடேக் நிறுவனத்திற்கு 787.50 கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 16.54 கோடி (16,54,93,410) தடுப்பூசி டோஸ்களை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது. 75 லட்சத்திற்கும் அதிகமான (75,71,873) கோவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் கையிருப்பில் உள்ளன. கூடுதலாக சுமார் 59 லட்சம் டோஸ்கள் (59,70,670), அடுத்த மூன்று நாட்களில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கூடுதலாக வழங்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.