டெல்லி : பெண் பாகிஸ்தான் உளவாளிக்கு ரகசிய தகவலை பகிர்ந்ததாக கூறி மத்திய வெளியுறவு அமைச்சக பணியாளரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் பால். மத்திய வெளியுறவு அமைச்சகத்தில் பண்முக ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மத்திய வெளியறவு அமைச்சம் தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு நவீன் பால் வழங்கியதாக கூறப்படுகிறது.
கிராஸ் ரிபப்ளிக் பகுதியில் வசித்து வரும் நவீன் பாலுக்கு அஞ்சலி என்ற பெயரில் பெண் ஒருவர் அறிமுகமானதாகவும், வாட்ஸ் அப் மூலம் இருவரும் பேசிக் கொண்டு இருந்த நிலையில், அந்த பெண் விரித்த வலையில் நவீன் பால் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாடு உள்பட ரகசியம் என ஆவணப்படுத்தப்பட்ட ஆவணங்களை பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு நவீன் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
நவீன் பாலின் மொபைல் போனில் ரகசியம் என பெயரிடப்பட்ட தகவல்கள் மற்றும் முக்கிய ஆவணங்களின் ஸ்க்ரீன் ஷாட் படங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஆவணங்களுக்கு பதிலாக சந்தேகத்திற்குரிய எண்ணில் இருந்து பரிவர்த்தணைகளை நவீன் பால் பெற்று உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பான தகவல்களை மத்திய வெளியுறவு அமைச்சகம் வழங்கிய நிலையில், நவீன் பாலை ஷானி கோயில் அருகில் வைத்து காசியாபாத் போலீசார் கைது செய்ததாக இந்திய புலனாய்வு அமைப்பு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நவீன் பாலின் மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓவின் விஞ்ஞானி பிரதீப் குருல்கர், நிர்வாண படங்களுக்காக பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ரகசியங்களை கசிய விட்டதாக கைது செய்யப்பட்டார். பெண் உளவாளியின் நிர்வாணப் புகைப்படங்களுக்காக அக்னி பிரம்மோஸ் ஏவுகணை ரகசியங்களை டிஆர்டிஓ விஞ்ஞானி பிரதீப் குருல்கர் கசியவிட்டதாக பயங்கரவாத தடுப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மீண்டும் அதேபோன்றதொரு சம்பவத்தில் பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு ரகசியத் தகவல்களை கசிய விட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சக ஊழியர் கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : Rahul Gandhi : "ஆக்ரோஷமாக பிரசாரம் செய்யுங்கள்... காங்கிரசுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது..." ராகுல் காந்தி!