மதுரா: உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவில், கடந்த 18ஆம் தேதி யமுனா விரைவுச் சாலையில் ட்ராலி சூட்கேஸ் ஒன்று கிடந்தது. அந்த சூட்கேஸ் சந்தேகப்படும்படியாக இருந்ததால், அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த சூட்கேஸை திறந்து பார்த்தபோது, ரத்தக் காயங்களுடன் இளம்பெண் ஒருவரின் சடலம் இருந்தது தெரியவந்தது.
கொல்லப்பட்ட இளம்பெண்ணை அடையாளம் கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக முயற்சித்தனர். இதையடுத்து நேற்று(நவ.20) காலை, அந்த இளம்பெண் டெல்லியைச் சேர்ந்த ஆயுஷி யாதவ்(21) என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரது குடும்பத்தினரை அழைத்து விசாரணை மேற்கொண்டதில், இளம்பெண் ஆணவக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
அதன்படி, ஆயுஷி சில நாட்களுக்கு முன்பு திடீரென வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டதால், அவரது தந்தைக்கு கடும் கோபத்தில் இருந்ததாகவும், கடந்த 17ஆம் தேதி அவர் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது, தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஆயுஷியின் தந்தை நித்தேஷ் யாதவை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் ஆணவக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாகவும் போலீசார் குறிப்பிட்டனர். தற்போது நித்தேஷ் போலீஸ் காவலில் இருப்பதாகவும், அவரிடமிருந்து கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். ஆயுஷி கொல்லப்பட்டது அவரது தாய் மற்றும் சகோதரருக்குத் தெரியும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கு... நார்கோ சோதனை ஒத்திவைப்பு...