தமிழ்நாடு, கர்நாடகா மாநில அரசுகள் வீரப்பனை உயிருடன் பிடிக்க முயற்சி மேற்கொண்டது. அதன்படி அரசு சார்பில் நியமிக்கப்பட்ட தனிப்படை போலீசார், வனத்துறை அதிகாரிகள் வீரப்பனை பிடிக்க தீவிரம் காட்டி வந்தனர்.
அதன்படி கடந்த 1990-1991ஆம் ஆண்டில் வீரப்பனை பிடிக்க கர்நாடக அரசால் நியமிக்கப்பட்டவர் வனத்துறை அதிகாரி சீனிவாஸ். இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்.
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா மலை மாதேஸ்வரா வனத்துறை அலுவலகத்தில் பணியாற்றினார். இவர் பொறுப்பில் இருந்த போது வீரப்பனை பிடிப்பதற்கு வனத்துறை அதிகாரிகள் தரப்பில் 3 ஜீப்புகள் பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில் கடந்த 1991ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி சீனிவாஸ் இந்த ஜீப்புகளில்தான் வீரப்பனை சுற்றி வளைத்தாக கூறப்படுகிறது. அப்போது சரணடைவது போன்று நடித்த வீரப்பன் வனத்துறை அதிகாரி சீனிவாசனை சுட்டு கொன்றதாக தெரிகிறது.
இதையடுத்து ஜீப்புகளை யாரும் எடுக்கவில்லை. அதில் ஒரு ஜீப் வீரப்பனை பிடிக்க சென்ற பாலாறு வனப்பகுதியில் விட்டு செல்லப்பட்டது. ஒரு ஜீப் நாகப்பாவை வீரப்பன் கொன்றபோது, பொதுமக்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. மீதமுள்ள ஒரு ஜீப் பழைய இரும்பு கடைகளில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் மலைமாதேஸ்வரா வனத்துறை அலுவலகத்தில் பணியில் சேர்ந்த துணை வனத்துறை அதிகாரி சோமசேகர், சீனிவாஸ் குறித்தும் அவர் பயன்படுத்திய ஜீப் குறித்தும் தெரிந்து கொண்டார்.
இதையடுத்து அவருக்கு ஒரு ஜீப்பை நினைவு சின்னமாக வைக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்தார். இதற்காக பாலாறு சென்ற அவர், அந்த ஜீப்பை மீட்டு மைசூருவில் உள்ள மெக்கானிக் கடைக்கு எடுத்து சென்று புதுப்பித்தார். பின்னர் மைசூருவில் இருந்து கொள்ளேகாலில் உள்ள மலை மாதேஸ்வரா வனத்துறை அலுவலகத்தில், தனி கூடாரம் அமைத்து சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக ஜீப் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Vignesh Lockup Death: 'விக்னேஷ் மரணவழக்கில் 15 நாட்களில் அறிக்கையினை சமர்ப்பிக்கவுள்ளோம்' - அருண் ஹெல்டர் தகவல்