டெல்லி: மார்கதர்சி வழக்கில் திரு.ராமோஜி ராவ் மற்றும் திருமதி சைலஜா கிரண் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பான வழக்கில் ஆந்திர அரசு கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது. தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுகளில் தலையிட முடியாது என்றும்; உயர் நீதிமன்றத்தின் சட்டப்பூர்வ அதிகாரத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தேவையில்லை என்றும் தெளிவுபடுத்தி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது, உச்ச நீதிமன்றம். மேலும் ஆந்திர அரசின் மனுவை தள்ளுபடி செய்கையில், இந்த வழக்கிற்கு தெலங்கானா உயர் நீதிமன்றத்திலேயே நிவாரணம் தேடுமாறும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தெலங்கானா உயர் நீதிமன்றம் அளித்த இடைக்கால உத்தரவில் தலையிட முடியாது என மறுத்த உச்ச நீதிமன்றம், மார்கதர்சி நிறுவனத்திற்கு எதிராக ஆந்திர பிரதேச சிஐடி போலீஸ் பதிவு செய்துள்ள வழக்கை விசாரிக்க தெலங்கானா உயர் நீதிமன்றத்திற்கு சட்டப்பூர்வ அதிகார வரம்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிர்த்த ஆந்திர அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்புடைய அனைத்து வாதங்களும் உயர் நீதிமன்றத்திலேயே முன்வைக்கப்பட வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் சட்டப்பூர்வ அதிகார வரம்பே இவ்வழக்கின் பிரதான பிரச்னையாகும். எனவே, இடைக்கால உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்யலாம் என நீதிபதிகள் மகேஸ்வரி, கே.வி.விஸ்வநாதன் அமர்வு உத்தரவிட்டுள்ளது. மனு மீது முன்னுரிமை அடிப்படையில் உயர் நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என தாங்கள் கருதுவதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தெலங்கானா உயர்நீதிமன்றம் முடிவெடுத்த பின்னர் குறிப்பிடத்தக்க வகையில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால் மனுதாரரான ஆந்திர அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆந்திர அரசின் மனுவானது இந்த பின்னணிகளின் அடிப்படையில், தேவையற்றது என நிறுவப்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மார்கதர்சி நிறுவன சேர்மன் ராமோஜி ராவ் மற்றும் எம்.டி. சைலஜா கிரண் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க தெலங்கானா உயர் நீதிமன்றம் விதித்த தடை குறித்த உத்தரவில் தலையிடவும் உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே கருத்து தெரிவித்த நீதிபதி மகேஷ்வரி, மனுதாரரின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் கூடுதல் தகவல்கள் பெறப்படவில்லை என்றும், முழுமையாக நோட்டீஸ் பெறப்பட்ட பிறகு, இரு வாதங்களும் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த ஆந்திர அரசின் மூத்த வழக்கறிஞரான மணீந்தர் சிங், இது குறித்து முழுமையான விவரங்கள் மற்றும் எதிர் மனுக்கள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி மகேஸ்வரி, இடமாறுதல் மனு நிலுவையில் வைக்கப்பட்டு இடைக்கால உத்தரவு தொடர்பான மீதமுள்ள இரு மனுக்களையும் கருத்தில் கொள்ளுங்கள் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய நீதிபதி விஸ்வநாதன், நீதிமன்ற அதிகார வரம்பு தொடர்பான இந்த வழக்கில், தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மெரிட் அடிப்படையில் வாதங்களை முன்வையுங்கள் எனக் கூறினார். தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு நிராகரிக்கப்பட்டால் வேறு கேள்விக்கு இடமில்லை என்றார்.
ஒருவேளை மனு அனுமதிக்கப்பட்டதால், நீங்கள் நீதிமன்ற அதிகார வரம்பு குறித்து இங்கு வாதிட வாய்ப்புள்ளது என்றார். நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி கூறுகையில் மெரிட் அடிப்படையில்தான் இவ்வழக்கை கருத முடியும் எனக் கூறினார்.
அதனடிப்படையில் இவ்வழக்கு நிராகரிக்கப்பட்டால், நீங்கள் மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு வரத் தேவையில்லை என்றார். ஒருவேளை மனு அனுமதிக்கப்பட்டால், அதிகார வரம்பு குறித்த வாதங்களை உச்ச நீதிமன்றத்திற்கு வந்து முன்வைக்கலாம் எனக் கூறினார். இந்த நேரத்தில் குறுக்கிட்ட மார்கதர்சி தரப்பு மூத்த வழக்கறிஞரான முகுல் ரோகத்கி, இவ்வழக்கில் எஃப்ஐஆர் அடிப்படையில் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.
ஆந்திர அரசு தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷண் கவுல் வாதங்களை முன்வைத்தார். இதன் பின்னர் பேசிய நீதிபதிள் மகேஸ்வரி மற்றும் விஸ்வநாதன், நீதிமன்ற அதிகார வரம்பு பற்றிய கேள்விகளுக்கான கதவுகள் திறந்தே உள்ளன என்றனர்.
தெலங்கானா உயர் நீதிமன்ற தீர்ப்பு உங்களுக்கு எதிராக சென்றால் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் எனக் கூறினர். நீரஜ் கிஷண் கவுல் பேசுகையில் எஃப்ஐஆர் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கலாகியிருப்பதாகவும், ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாரணை நீதிமன்றம் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் என்றார். இதற்குப் பதிலாக தெலங்கானா உயர் நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கையை பார்வையிடுகிறது. எஃப்ஐஆரில் உள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆந்திர பிரதேசம் சார்ந்தவை, இதில் எப்படி தெலங்கானா உயர் நீதிமன்றம் தலையிட முடியும் என நீரஜ் கவுல் கேள்வி எழுப்பினார்.
இந்த வாதத்தை ஏற்க இரு நீதிபதிகளும் மறுத்துவிட்டனர். அப்போது பேசிய நீதிபதி மகேஸ்வரி, “இந்த வழக்கின்படி, சில சிட் ஃபண்ட் நிறுவன அலுவலகங்கள் ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ளன. அங்கிருந்து சேகரிக்கப்படும் நிதி ஐதராபாத்தில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது ஒரு எளிய வழக்கு அல்ல" எனக் கூறினார்.
ஆந்திர அரசு சார்பில் தொடர்ந்து வாதிட்ட நீரஜ் கிஷண் கவுல், நிறுவனத்தின் சிட் ஃபண்ட் கிளைகளுக்கு தனித்தனியே வங்கிக் கணக்குகளை பராமரிப்பதற்குப் பதிலாக வேண்டுமென்றே கார்ப்பரேட் கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டு அங்கிருந்து நிதி திருப்பி விடப்படுகிறது என்பது முக்கிய குற்றச்சாட்டு. இதேபோல் சிறப்பு கணக்குகளில் பேலன்ஸ் ஷீட்டுகள் பராமரிக்கப்படுவதில்லை. ஏலத்தில் வெற்றி பெறுபவர், ஒரு செக்யூரிட்டி பத்திரத்தை அளித்து முழுத் தொகையையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், இந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் வட்டி வழங்குவதாக கூறி, அதே தொகையை டெபாசிட் செய்யச் சொல்கிறார்கள். ஒரு மாநிலத்தில் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது, மற்றொரு மாநிலத்தில் நிதிகள் பரஸ்பர நிதிகளுக்குத் திருப்பி விடப்படுகின்றன. இறுதியாக ஆந்திரப் பிரதேசத்தில் தான் பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும். எனவே, ஐதராபாத்தில் இருந்து மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் செய்யப்பட்டதாக வாதிடுவது முறையல்ல என்று வழக்கறிஞர் கவுல் கூறினார்.
இவ்வழக்கில் புகார்தாரர்கள் மற்றும் சாட்சியங்கள் ஆந்திரப் பிரதேசத்தில் இருப்பதால், அங்கும் விசாரணை நடைமுறைகள் நடத்த வேண்டும் என அவர் கூறினார். இதற்குப் பதிலளித்த நீதிபதி விஸ்வநாதன், இங்கு முன்வைக்கப்படும் வாதங்களையும், இங்கு செலவிடப்படும் நேரத்தையும் முக்கிய வழக்குக்காகப் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றார்.
தகுதியின் அடிப்படையில் வழக்குப் பார்க்கப்பட்டு, அதிகார வரம்பு விஷயத்தில் உங்கள் வாதங்களைக் கருத்தில் கொண்டால் உங்களுக்கு தீர்வு கிடைக்கும். தீர்ப்பு உங்களுக்கு எதிராக வந்தால் இங்கே வாருங்கள் என்று ஆந்திர அரசின் வழக்கறிஞரிடம் அறிவுறுத்தினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய மார்கதர்சி வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, தெலங்கானா உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் தனக்கு உண்டு என்று கூறும்போது, ஆந்திர அரசு தாக்கல் செய்த இடமாற்ற மனுக்கள் செல்லாததாகி, பயனற்றதாகிவிடும் என்பதை நினைவூட்டினார். ஆந்திர அரசின் வழக்கறிஞர் மணீந்தர் சிங், குறைந்தபட்சம் இடமாற்ற மனுவை பரிசீலிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டபோது, உச்ச நீதிமன்றம் அதனை ஏற்க மறுத்தது.
எல்லாவற்றிலும் உயர் நீதிமன்றமே முடிவெடுக்கட்டும் எனக் கூறிய நீதிபதி மகேஸ்வரி, வழக்கின் பின்னணி மற்றும் அதிகார வரம்பைக் கருத்தில் கொண்டு, உயர் நீதிமன்றமே இந்த வழக்கை விசாரிக்கட்டும். அங்கும் உங்கள் வாதங்களை முன்வைக்கலாம் என்றார்.
வழக்கை நிலுவையில் இல்லாது வைத்திருக்க வேண்டும் என்று வழக்கறிஞர் மணீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்தபோது, அதனையும் ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார். "இந்த கோரிக்கையில் என்ன பயன்? உயர்நீதிமன்றத்தின் மீது தேவையற்று ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருப்பதைத் தவிர" இது தான் உத்தரவு பிறப்பித்த போது நீதிபதி கூறிய வார்த்தைகள்.
சிட் ஆடிட்டர் நியமனத்தில் தவறு இருப்பதாக தெலங்கானா உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை எதிர்த்து ஆந்திரப் பிரதேச அரசு தாக்கல் செய்த மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. “உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுகளில் தலையிட நாங்கள் மறுக்கிறோம்” இதுதான் வழக்கை தள்ளுபடி செய்யும் போது நீதிபதி மகேஸ்வரி கூறிய வார்த்தைகள்.
இதையும் படிங்க: தாய்ப்பால் தானத்தை தொடர்ந்து... தலை முடி தானம் வழங்கத் தொடங்கிய தாய்!