ஒடிசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த ரகசியத் தகவலின் பேரில் சிறப்புப் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்புப் படை உள்ளிட்டவை இணைந்து ஜடம்போ பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, மாவோயிஸ்ட் பதுங்கி இருந்த இடத்தின் மீது அவர்கள் தாக்குதல் நடத்தினர். பின்னர், அங்கிருந்து பயங்கர ஆயுதங்கள், வெடி பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல்செய்தனர்.
இது குறித்து மல்காங்கிரி காவல் கண்காணிப்பாளர் ரிஷிகேஷ் கூறுகையில், "அர்பதார் - அந்தரபள்ளி கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டை மேற்கொண்டோம். அப்போது, மாவோயிஸ்ட் பதுங்கியிருந்த பல இடங்களைச் சுற்றி வளைத்தோம்.
அங்கிருந்து, பயங்கர ஆயுதங்கள், வெடிபொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தோம். இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி அப்பாவி மக்கள்மீது அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். அவற்றைப் பறிமுதல்செய்ததன் மூலம் இது அவர்களுக்கு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது" என்றார்.