ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த பொறியாளரான சுஜீத் சுவாமி, 2017-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி பயணம் செய்வதற்காக ரயில் பயணச்சீட்டை முன்பதிவு செய்தார். ஆனால், பயணம் செய்யாமல் அந்த பயணச்சீட்டை ரத்து செய்துள்ளார்.
அதில், சேவை வரியாக 35 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால், ஜிஎஸ்டி அமலுக்கு வருவதற்கு முன்பாகவே தான் பயணச்சீட்டை ரத்து செய்துவிட்டதாகவும், அதனால் தன்னுடைய 35 ரூபாயைத் திருப்பித் தர வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகத்திடம் கோரியுள்ளார். ஆனால், பணம் கிடைக்கவில்லை.
அதனால், ரயில்வே, நிதியமைச்சகத்தில் ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பினார். பல்வேறு அரசுத்துறைகளுக்கு மனுவும் அளித்துள்ளார். இந்த நிலையில், ஐந்து ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு, தனது 35 ரூபாயை சுஜீத் சுவாமி முழுமையாகப் பெற்றுள்ளார்.
இது எனக்கான போராட்டம் அல்ல; 3 லட்சம் பயணிகளுக்கான போராட்டம்: இந்த ஐந்து ஆண்டு காலப் போராட்டம் தொடர்பாக சுஜீத் சுவாமி கூறுகையில், "எனது 35 ரூபாயை முழுமையாக பெறுவதற்கு, 50 ஆர்டிஐ விண்ணப்பங்களையும், நான்கு அரசு துறைகளுக்கு கடிதங்களையும் அனுப்பினேன். பிரதமர், ரயில்வே அமைச்சர், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ஜிஎஸ்டி கவுன்சில் மற்றும் நிதியமைச்சர் ஆகியோரை டேக் செய்து ட்விட்டரிலும் பதிவிட்டேன்.
எனது ஆர்டிஐக்கு ஐஆர்சிடிசி பதில் அளித்திருந்தது. அதில், 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதிக்கு முன்பு ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுக்கு பிடித்தம் செய்யப்பட்ட சேவை வரி 35 ரூபாய் திருப்பித் தரப்படும் என்று கூறியது. அதன்படி, கடந்த 2019-ம் ஆண்டு மே 1-ம் தேதி 33 ரூபாய் கிடைத்தது. ரவுண்ட் ஆப் மதிப்பு என்ற பெயரில் கழிக்கப்பட்ட 2 ரூபாயை பெற மேலும் மூன்று ஆண்டுகள் போராடினேன். அதன் பலனாக நேற்று 2 ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது. எனது போராட்டத்தின் விளைவாக, 2 லட்சத்து 98 ஆயிரம் பயணிகளுக்கு தலா 35 ரூபாய் வீதம், மொத்தம் 2 கோடியே 43 லட்சம் ரூபாயை திருப்பிச் செலுத்த ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது" என்று கூறினார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் 6 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்!