டெல்லி: தனது அலுவலகம், மற்றும் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை தொடர்பான விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாக துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவின் பரிந்துரையின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மற்றும் அவர் தொடர்புடைய இடங்கள் உறவினர்களின் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தொடர்ந்து மணீஷ் சிசோடியா மீது வழக்குப் பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் அவரது பஞ்சாப் நேஷனல் வங்கி லக்கரில் சோதனை நடத்தினர். சிபிஐ அதிகாரிகல் நடத்திய சோதனையில் எந்த விதமான ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.
இந்நிலையில் மீண்டும் அலுவலகம் மற்றும் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், "இன்று மீண்டும் சிபிஐ எனது அலுவலகத்தில் சோதனை நடத்தி உள்ளது. சிபிஐ அதிகாரிகள் எனது வீட்டை சோதனை செய்தனர்.
எனது அலுவலகத்தை சோதனை செய்தனர். எனது வங்கி லாக்கரை சோதனை செய்தனர். மேலும் எனது கிராமத்தில் கூட விசாரணை நடத்தினர். எனக்கு எதிராக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. நான் எந்தத் தவறும் செய்யாததால் எதுவும் கண்டுபிடிக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் எந்த சோதனையும் நடத்தப்படவில்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணீஷ் சிசோடியா அலுவலகத்துக்கு சிபிஐ குழு ஆவணம் சேகரிக்கச் சென்றதாகவும், அது ரெய்டு அல்ல என்றும் சிபிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் - நாக்பூர் போலீசார் விசாரணை!