இம்பால் : மணிப்பூரில் ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கு பிறகு இணைய சேவை முடக்கம் நீக்கப்பட்டு உள்ளது. நிபந்தனைகளுடன் கூடிய இணைய சேவை வழங்க மாநில அரசு முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் கலவரம் வெடித்து வருகிறது. பொருளாதாரத்தில் முன்னேறிய மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கக் கூடாது என வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அதில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் கலவரச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
இந்த கலவரச் சம்பவங்களில் சிக்கி 160க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பு தேடி முகாம்களில் வசித்து வருகின்றனர். ஏறத்தாழ 3 மாதங்களாக நீடித்து வரும் கலவரத்தை கட்டுப்படுத்த மாநில அரசு போராடி வருகிறது.
கலவரத்தை முன்னிட்டு மாநிலம் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில் ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கு பின் மணிப்பூரில் நிபந்தனைகளுடன் இணைய சேவையை வழங்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கல்வி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் இணைய சேவையை மட்டுமே கொண்டு செயல்படும் பிற நிறுவனங்கள் மற்றும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இந்த பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இணைய சேவையைப் பெற, கணினி ஐபி முகவரி கொண்டு தினசரி அடையாள குறியீடு மற்றும் பாஸ்வேர்டு வழங்கப்படும் எனவும், கணினிகளில் இருந்து ஹாட்ஸ்பாட் வசதியை பயன்படுத்தி இணைய சேவையை பிற செயலிகளில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாகவும், விதிகளை மீறி பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் செல்போன்களுக்கான இணைய சேவை தடை தொடரும் என கூறப்பட்டு உள்ளது. அனைத்து ஐபி முகவரிகளும் தர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படும் என்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக போலி தகவல்கள், வீடியோக்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக சாலையில் அழைத்துச் செல்லப்பட்டு துன்புறுத்தப்பட்ட வீடியோ வெளியான நிலையில், மீண்டும் அதுபோன்ற வீடியோக்கள் வெளியாகும் அச்சம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : "மணிப்பூர் விவகாரத்தில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்க தயார்" - மத்திய அமைச்சர் அமித் ஷா!