இம்பால் : மணிப்பூர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங் தெரிவித்துள்ளார். கக்சிங் பகுதியில் உள்ள சுக்னு, சுரச்சந்பூரில் உள்ள கங்வி, மேற்கு இம்பாலில் உள்ள கங்சப், கிழக்கு இம்பால் பகுதியில் உள்ள சகோல்மங், பிஷன்பூர், குருக்புல் ஆகிய இடங்களில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கு இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டுதாக அவர் தெரிவித்து உள்ளார்.
அந்த மோதலிக் ஏறத்தாழ 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்து உள்ளார். மோதல் நடந்த இடங்களில் பாதுகாப்பு பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளதாகவும் முதலமைச்சர் பைரன் சிங் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தீவிரவாதிகள் எம்-16, ஏ.கே.47 உள்ளிட்ட அதிநவீன துப்பாக்கிகளை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதற்கு வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக பதிலடி கொடுக்கவும், மாநிலத்தில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் எதிரொலியாக 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு படையினருக்கும், ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுக்களுக்கும் தொடர்ந்து மோதல் நீடித்து வருவதாக கூறினார்.
பாதுகாப்பு படையினருக்கும், குக்கி பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருவதாகவும், ஏகே-47, எம்-16 உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு பயங்கரவாத குழுவினர் தாக்குதல் நடத்தி வருவதாகவும் முதலமைச்சர் பைரன் சிங் தெரிவித்தார். மேலும் பொது மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும், அரசு மீது அவநம்பிக்கை கொள்ளாமல் பாதுகாப்பு படையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் தெரிவித்து உள்ளார்.
மாநிலத்தில் இயல்பு நிலை திரும்ப முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், இந்திய ராணுவத்தின் 140 துருப்புகள், அசாம் ரைபில்ஸ், உள்ளிட்ட 10 ஆயிரம் வீரர்கள் மாநிலம் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையினராக உள்ள மெய்டி சமூகத்தினருக்கு பட்டியலின பழங்குடியினர் அந்தஸ்து அளிப்பதை எதிர்த்து, கூகி உள்ளிட்ட பழங்குடியினர் அமைப்புகள் கடந்த 3ஆம் தேதி பேரணி நடத்தினர்.
இதில் ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. மாநிலமே கலவர பூமியாக காட்சி அளிக்கிறது. மாநிலம் முழுதும் ஏற்பட்ட இந்த கலவரத்தில் அப்பாவி மக்கள் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் 200க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இந்த கலவரத்தில் சேதமாகின.
10 நாட்களுக்கு மேலாக மாநிலத்தில் பதற்றம் நிலவிய நிலையில் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கலவரத்தால் மாநிலம் முழுவதும் 54 ஆயிரம் மக்கள் தங்களது வீடு வாசல்களை இழந்து அகதிகளாக மாறி உள்ளனர். 20 காவல் நிலையங்கள், 2 ஆயிரம் வீடுகள், 150 தேவாலயங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் தீக்கிரையாக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதையும் படிங்க : புதிய நாடாளுமன்றம் திறப்பு... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியது என்ன?