மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார். இதில் மாநில சுகாதாரத் துறை செயலாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "கோவிட் 19-க்கு எதிரான சக்தி வாய்ந்த ஆயுதம் தடுப்பூசி. கோவிட் தடுப்பூசி முழுமை அடைவதற்குத் தொண்டு நிறுவனங்கள், ஆன்மீக அமைப்புகள், சமயத் தலைவர்கள், சமூக செல்வாக்கு மிக்கவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரை ஈடுபடுத்த வேண்டும்.
பாதுகாப்புக் கவசம் எனப்படும் கோவிட்-19 தடுப்பூசியை நாட்டில் தகுதிவாய்ந்த குடிமக்கள் ஒருவரும் போடாமல் விடுபடவில்லை என்பதைக் கூட்டு முயற்சியோடு நாம் உறுதி செய்ய வேண்டும். தயக்கம், தவறான தகவல், மூட நம்பிக்கை போன்ற பிரச்சினைகளையும் நாம் சரி செய்ய வேண்டும்.
அரசு ஊழியர்கள் அனைவரையும், வாரத்தில் ஒருநாள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில், அவர்களை ஊக்கப்படுத்தவும், திரட்டவும் வேண்டும்.
அருணாச்சலப் பிரதேசத்திற்கு அண்மையில் தாம் பயணம் செய்த போது, பல வீடுகளில் “முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட வீடு” என்று ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருப்பதை கவனித்ததாக குறிப்பிட்ட அமைச்சர், இதுபோன்ற உத்திகளை மற்ற மாநிலங்களும் பயன்படுத்தலாம்" என்று கூறினார்.
இந்தியாவில் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தியவர்கள் 82%, இரண்டாவது டோஸ் செலுத்தியவர்கள் 43% உள்ள நிலையில், மணிப்பூரில் 54%, 36%, மேகாலயாவில் 57%, 38%, நாகாலாந்தில் 49%, 36%, புதுச்சேரியில் 66%, 39% என்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் மேற்கண்ட மாநிலங்களில் தடுப்பூசித் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: பெருந்தொற்று காலத்தில் இந்தியாவின் இயக்க சக்தியாகத் திகழ்ந்த ரயில்வே - வெங்கையா பாராட்டு