டெல்லி: சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துவருகிறது. சீனாவில் பரவி வரும் ஒமைக்ரான் மாறுபாடான பி.எஃப்.7 தொற்று இந்தியாவில் 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசனை கூட்டங்களை நடத்திவருகிறது. அந்த வகையில், பிரதமர் மோடி உயர்மட்ட அதிகாரிகளுடன் காணொலி மூலம் நேற்று (டிசம்பர் 22) அவசர ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் கரோனா பரவல் பாதுகாப்பு தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று (டிசம்பர் 23) ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையின் போது பன்னாட்டு விமான நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பொதுயிடங்களில் முகக் கவசம், சமூக இடைவெளியை பின்பற்றுதல், பள்ளி, கல்லூரிகளில் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மருந்து, மருத்துவ உபகரணங்கள் தயார் நிலை - பிரதமர் மோடி உத்தரவு