டெல்லி: கடந்த திங்கள்கிழமை (அக் 17) மாலை 7 மணியளவில் ரன்ஹோலா காவல் நிலைய கட்டுப்பாட்டு மையத்திற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. இந்த அழைப்பில் கிடைத்த தகவலின்படி, டெல்லியின் விகாஸ் நகர் பகுதிக்கு காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு தலையில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் இருந்த நபரை மீட்ட காவல்துறையினர், அவரை ஆஷிர்வாட் நர்சிங் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், நகரின் கண்டா நாலாவில் ஆஷிஷ் (22) என்ற இளைஞரை கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்குள் நடந்ததாக வெளி மாவட்ட காவல் துணை ஆணையர் சமீட் ஷர்மா கூறியுள்ளார். இதனிடையே ஆஷிசிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. ஆஷிசுக்கும் அவரது வீட்டின் அருகில் உள்ளவரான ஷேர் சிங் (42) என்பவருக்கும் பார்க்கிங் செய்வதில் தகராறு இருந்துள்ளது.
இதற்காக ஷேர் சிங், ஆஷிசின் குடும்பத்திற்கு சூனியம் வைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆஷிஷ், ஷேர் சிங்கை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் தனது நண்பர் ஒருவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை வாங்கிய ஆஷிஷ், ஷேர் சிங் அவரது ஒரு கடையின் முன்னால் அமர்ந்திருந்தபோது சுட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து ஆஷிஷ் மீது இந்திய தண்டனைச் சட்டம் 307 மற்றும் ஆர்ம்ஸ் விதி 27ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆஷிசிற்கு துப்பாக்கி கொடுத்து உதவிய நபரை தேடும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாக காவல் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காப்பக சிறுமிகளை பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை