பீகார்: பீகார் மாநிலம் பாட்னாவில் டானாபூர் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்ற நபர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் அதிகா சவுத்ரி சிங் என்ற திருநங்கையை சந்தித்துள்ளார். அதிகா சவுத்ரி பீகாரின் தர்பங்கா நகரைச் சேர்ந்தவர். இருவரும் நட்பாகப் பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
இருவரும் காதலித்து வந்தது ரவிக்குமாரின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேலும், அதிகா சவுத்ரியை சந்திக்கக்கூடாது, காதலிக்கக் கூடாது என்று கூறி ரவிக்குமாரை மிரட்டியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 25ஆம் தேதி உள்ளூர் கோயில் ஒன்றில் வைத்து, ரவிக்குமார், அதிகா சவுத்ரி இருவரும் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது. திருமணம் முடிந்தவுடன் இருவரும் ரவிக்குமாரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது, ரவிக்குமாரின் தந்தை சத்யேந்திர சிங், தாய் மற்றும் மூத்த சகோதரர் தஞ்சய் சிங் மூவரும் சேர்ந்து, இருவரையும் அடித்து வெளியே துரத்தியுள்ளனர். இதையடுத்து, இருவரும் வேறு பகுதிக்கு சென்று குடியிருந்துள்ளனர்.
இந்தச் சூழலில், கடந்த 13ஆம் தேதி ரவிக்குமார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் அவரை கொலை செய்ய முயற்சித்ததாக தெரிகிறது. ரவிக்குமார் அவர்களிடமிருந்து தப்பித்து உயிர் பிழைத்துள்ளார்.
இந்த நிலையில், ரவிக்குமார் நேற்று(ஜூலை 25) தனது பெற்றோர் மற்றும் சகோதரர் மீது டானாபூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருநங்கையை திருமணம் செய்ததற்காக தனது பெற்றோர் மற்றும் சகோதரர் தன்னை மிரட்டுவதாகவும், அண்மையில் தன்னை கொல்ல முயற்சி நடந்துள்ளதால், பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் புகாரில் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரவிக்குமார் கூறும்போது, "நான் திருமணம் செய்வதற்கு முன்னரே எனது இணையரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்பினேன். ஆனால், என் பெற்றோர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு முறை அதிகாவை சந்தியுங்கள், எங்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள் என்று என் பெற்றோரிடம் கேட்டேன். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர். என் பெற்றோர் என்னை அடித்தார்கள், என் சகோதரர் என்னை மிரட்டுகிறார்" என்றார்.
மேலும், ரவிக்குமாரின் குடும்பத்தினர் 60 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்பதாக அதிகா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆன்லைனில் வேலை தேடுபவர்களே உஷார்.. எச்சரிக்கின்றனர் சைபர் கிரைம் போலீசார்!