பெங்களூரு: கர்நாடகா மாநிலம் கோலாரில் ஷெட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ் (38). இவருக்கும் ஆந்திர மாநிலம் புங்கனூரைச் சேர்ந்த சிரிஷா என்பவருக்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 முறை பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், ஆரம்பம் முதலே லோகேஷ் ஆண் குழந்தையை எதிர்பார்த்துள்ளார். அதன்படி 3ஆவது முறையாக பெண் குழந்தை பிறந்த போதிலிருந்தே மன உளைச்சலில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே சிரிஷா 4ஆவது முறையாக கருத்தரித்தார். அதைத்தொடர்ந்து நவம்பர் 4ஆம் தேதி, முல்பாகலில் உள்ள மருத்துவமனையில் சிரிஷாவுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் லோகேஷ் மிகுந்த விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லோகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சிரிஷா அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையிலிருந்து உறவினர்கள் வீடு திரும்பிய போது தற்கொலை சம்பவம் குறித்து அவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஸ்ரீநிவாஸ்பூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைனில் போதைப் பொருள்கள் கலந்த சாக்லேட் விற்பனை... ஒருவர் கைது...