சோனார்பூர்: மேற்கு வங்க மாநிலம், சோனார்பூரைச் சேர்ந்த தும்பா என்பவர் காணாமல் போனதைத் தொடர்ந்து, அவரது தந்தை அளித்தப் புகாரின் பேரில், சோனார்பூர் காவல் நிலையத்தில் கடந்த மார்ச் 2020ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு 3 வருடத்திற்குப் பின், புலனாய்வு அமைப்பு மூலம் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது.
சோனார்பூரில் உள்ள மிலன்பள்ளி என்னும் பகுதியில் வசிப்பவர்கள் தபன் மொண்டல் - ரூபாலி மொண்டல் தம்பதி. இவர்கள் கரோனா காலகட்டத்தில் தங்கள் வீட்டை வாடகைக்கு விட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அந்த வீட்டை பொம்பல் என்பவர் வாடகைக்கு எடுத்து அவரது மனைவி தும்பா மொண்டலுடன் அங்கு வசித்து வந்துள்ளார். சில காலம் இருவரும் அங்கு வசித்து வந்த நிலையில், திடீரென பொம்பல் அங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் காலி செய்துள்ளார்.
அவர் காலி செய்த சில நாட்களில் பொம்பலின் உறவினர் ஒருவர் வந்து, அவர் செலுத்தாமல் விட்ட வாடகைக்காக, அவருக்குச் சொந்தமான பொருட்கள் என அனைத்தையும் எடுத்துச்சென்றுள்ளார். இதற்கிடையே குல்தாலி பகுதியில் வசிக்கும் தும்பா மொண்டலின் தந்தை லக்ஷ்மண் மொண்டல், தனது மகளைக் காணவில்லை என சோனார்பூர் காவல் நிலையத்தில் மார்ச் 2020ல் புகார் அளித்துள்ளார். அதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் முதற்கட்ட விசாரணையை, தும்பா மொண்டலின் கணவரான பொம்பலிடமிருந்து ஆரம்பித்துள்ளனர்.
சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட பொம்பல் போதுமான ஆதாரமற்ற காரணத்தால் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் போடப்பட்ட மேல்முறையீட்டின் காரணமாக இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணையில் குடும்பச் சண்டை காரணமாக கணவரே மனைவியை கொன்று செப்டிக் டேங்கில் மறைத்து வைத்த கொடூரச் சம்பவம் தெரிய வந்துள்ளது.
இது குறித்து சிபிசிஐடி அறிக்கையில், ''இந்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் தும்பாவின் கணவர் பொம்பல் கைது செய்யப்பட்டு காவல்துறை விசாரணையில் எவ்வித ஆதாரமும் அற்ற நிலையில் விடுவிக்கப்பட்டார். ஆனால் தற்போது வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து பல உண்மைகள் வெளியாகியுள்ளன.
தும்பா காணாமல் போன வழக்கில் அவர் கணவரான பொம்பலை விசாரித்த போது, விசாரணையின் தீவிரத்தில் பொம்பல் தானாகவே உண்மையை ஒப்புக்கொண்டார். குடும்பத் தகராறு காரணமாக தும்பாவை தான் தான் கொலை செய்ததாகவும், பின் உடலை சோனார்பூரில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டின் செப்டிக் டேங்கில் வீசியதாகவும் தெரிவித்தார்” எனக் கூறப்பட்டுள்ளது.
பொம்பால் வெள்ளிக்கிழமை (ஜூன் 23) அளித்த இந்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர்கள் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை அவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டில் தீவிர சோதனை நடத்தினர். இறுதியில் செப்டிக் டேங்கில் இருந்து தும்பாவின் எலும்புக்கூடு மீட்கப்பட்டது. மேலும், இந்து முறைப்படி திருமணமான பெண்கள் பயன்படுத்தும் பொருட்களும் செப்டிக் டேங்கில் சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட பொம்பலின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் சிபிசிஐடி விண்ணப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கு காணாமல் போன பெண்ணைத் தேடுவது தொடர்பான வழக்கு என்பதால், அதில் கொலைக் குற்றச்சாட்டை சேர்க்குமாறு சிபிசிஐடி நீதிமன்றத்தில் விண்ணப்பித்தது.
இதையும் படிங்க: சென்னை மாநகர க்ரைம் செய்திகள் : கார் மோதி ஒருவர் பலி, திமுக நிர்வாகி வீட்டில் ஜிஎஸ்டி அலுவலர்கள் சோதனை