புவனேஷ்வர்: ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் ஒரு முதியவருக்கு 30 நிமிடங்களுக்குள் இரண்டு தவணை கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ரகுபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசன்னா குமார் சாஹு (51). இவர் குந்தாபூரில் உள்ள சத்யசாய் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள தற்காலிக தடுப்பூசி முகாமில் முதல் தவணையை கடந்த சனிக்கிழமை செலுத்திக்கொண்டார்.
30 நிமிடங்களுக்குள் இரண்டு தவணை தடுப்பூசி
தடுப்பூசி செலுத்தியதும் கண்காணிப்பு அறைக்குச் செல்லாமல், அதே இடத்தில் அமர்ந்திருந்துள்ளார். சுமார் 30 நிமிடங்கள் கழித்து அந்த அறைக்கு வந்த செவிலி, அவருக்கு மீண்டும் தடுப்பூசி செலுத்தியுள்ளார்.
அதன் பின்னரே முதல் தவணை தடுப்பூசி அரை மணி நேரத்திற்கு முன்னதாகத்தான் செலுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. உடனடியாக, அவரை 2 மணி நேரம் கண்காணிப்பில் மருத்துவர்கள் வைத்திருந்தனர். அவர் உடல்நிலை சீராக உள்ளதை உறுதிசெய்த பிறகு, வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.
ஒரே இடத்தில் அமர்ந்ததால் குழப்பம்
இது குறித்து பேசிய முகாமின் பார்வையாளர் ராஜேந்திர பெஹெரா, "முதியவர் தடுப்பூசி செலுத்திய பிறகு, கண்காணிப்பு அறைக்குச் செல்லாமல் அதே இடத்தில் அமர்ந்திருந்துள்ளார்.
இதனால், தவறுதலாக அவருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவருக்கு எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. உடல்நிலை சீராக உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'தடுப்பூசி போடுங்கள்' - கூகுளின் டூடுல் அட்வைஸ்