சோன்பத்ரா : உத்தரபிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞரை தாக்கி, நாக்கால் செருப்பை நக்க வைத்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், மின்சாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் சோனாபத்ரா மாவட்டத்தில் கடந்த வாரம் நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த வீடியோவில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞரை, ஒருவர் அதட்டி, தன் காலில் அணிந்திருக்கும் செருப்பை நக்கச் சொல்லியும், தனது வலது காலை முன்னோக்கி நீட்டுகிறார்.
அந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞரும் கைகளை தரையில் ஊன்றியபடி, தன் கைகளால் அந்த நபரின் கால்களைத் தொட்டு செருப்பை நக்கத் தொடங்குவதை வீடியோவில் பதிவாகி உள்ளது. மேலும் அந்த இளைஞர் காதுகளைப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடுவதையும் வீடியோவில் காண முடிகிறது.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞரின் பெயர் ராஜேந்திரன் என தெரியவந்து உள்ளது. அவரை தாக்கிய நபர் தேஜ்பாலி சிங் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில்ம் வீடியோவில் உள்ள ராஜேந்திரன் என்பவர் சம்பவம் நடந்த ஊரில் உள்ள தனது தாய்மாமா வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு மின்சார பிரச்னை ஏற்படவே அதனை ராஜேந்திரன் சரி செய்து உள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், தங்களது வீடுகளில் உள்ள பிரச்னைகளை கூறி அவரிடம் உதவி கோரி உள்ளனர். அவர்களுக்கும் ராஜேந்திரன் உதவியதோடு, அதற்கென ஒரு சிறு தொகையை கட்டணமாகவும் பெற்றுக் கொண்டு உள்ளார்.
இதனை அறிந்த மின்சாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் லைன்மேனாக பணியாற்றும் அப்பகுதியை சேர்ந்த தேஜ்பலி சிங் என்பவர், ராஜேந்திரனை சரமாரியாக தாக்கி உள்ளார். இந்த பக்கமே வரக்கூடாது என மிரட்டி, காலில் விழச் செய்து செருப்பை நாக்கால் நக்க வைத்துள்ளார் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மின்சாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் லைன்மேனாக பணியாற்றிய தேஜ்பலி சிங் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடந்த ஒரு வாரத்திற்கு முன் நடந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது வீடியோ வைரலாகி உள்ளது.
அண்மையில், மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரை அழைத்து அவரது பாதங்களை கழுவினார்.
தற்போது மீண்டும் ஒரு பாஜக ஆளும் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : சண்டிகர், டெல்லியில் வரலாறு காணாத கனமழை... வீடுகளை சூழ்ந்த மழைநீர்! மக்கள் தவிப்பு!