ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் திரிகுட் மலைப்பகுதியில் நேற்று (ஏப். 10) 1,286 அடி உயரத்தில் சென்றுக் கொண்டிருந்த இரண்டு கேபிள் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதின. இந்த விபத்தில் இரண்டு பயணிகள் உயிரிழந்தனர். 19 கேபிள் கார்களில் 48 பேர் அந்தரத்தில் சிக்கினர்.
இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில், சம்பவயிடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் நாடுவானில் சிக்கிய பயணிகளை 24 மணி நேரமாக போராடி மீட்டுவருகின்றனர்.
இதனிடையே மீட்புணியில் இந்திய விமானப்படையின் இரண்டு எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள் இணைந்தன. இந்த ஹெலிகாப்டர்களின் உதவியுடன் இதுவரை 30 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 18 பயணிகளை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.
இந்த நிலையில், கேபிள் காரிலிருந்து கயிறுகட்டி ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட பயணி ஒருவர் நடுவானிலிருந்து கீழே தவறி விழுந்து, உயிரிழந்தார். இதுகுறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.
திரிகுட் மலை கேபிள் கார்கள்
ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டம் திரிகுட் மலைப்பகுதியில் 20 கி.மீ. தொலைவிற்கு 1,286 அடி உயரத்தில் கேபிள் கார்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரோப்வேயில் மொத்தம் 25 கேபிள் கார்கள் உள்ளன. இங்குள்ள பாபா பைத்யநாத் கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கேபிள் கார்களில் பயணம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இங்குள்ள மலை சிகரங்கள் ஜூலை-செப்டம்பர் மாதங்களில் மேகங்களால் சூழப்பட்டிருக்கும். அப்போது கேபிள் கார்களிலிருந்து நீர்வீழ்ச்சிகள், குன்றுகள், சிகரங்களை காணலாம். இதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர்.
இதையும் படிங்க: 1,300 அடி உயரத்தில் மோதிக்கொண்ட கேபிள் கார்கள்... உயிருக்கு போராடிய 48 பேர்...