ராஜஸ்தான்: பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது நண்பருடன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்திற்கு சுற்றுலா வந்துள்ளார். இருவரும் ஜெய்ப்பூரில் மோதிலால் அடல் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், இந்த பிரிட்டனைச் சேர்ந்த பெண் சுற்றுலாப்பயணிக்கு நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், தெரு ஒன்றில் பிரிட்டனைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகளுடன் நபர் ஒருவர் நடந்து செல்கிறார். சுற்றுலாப் பயணிகளிடம் பேசிக் கொண்டே செல்லும் அந்த நபர், சிரித்துக் கொண்டே பெண் சுற்றுலாப் பயணியின் தோளில் கை போடுகிறார். பிறகு, அந்தப் பெண்ணை தவறான முறையில் தொடுகிறார். அப்போது, அசெளகரிமாக உணர்ந்த அந்தப் பெண் அந்த நபரின் கையைத் தட்டி விடுகிறார்.
இந்த வீடியோவை டெல்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மல்லிவால் கடந்த 3ஆம் தேதி, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், "இந்த வீடியோவில் உள்ள நபர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை தகாத முறையில் தொடுவதைக் காணலாம். இது மிகவும் வெட்கக்கேடானது. இது போன்ற சம்பவங்கள் நாட்டுக்கே கெட்ட பெயரை ஏற்படுத்துகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்தப் பதிவில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் அம்மாநில காவல்துறையையும் டேக் செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், வீடியோவில் வெளிநாட்டுப் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபர், குல்தீப் சிங் சிசோடியா (40) என்பதும், அவர் ஒரு டாக்ஸி ஓட்டுநர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குல்தீப் சிங்கை நேற்று(ஜூலை 4) பிகானேர் மாவட்டத்தில் வைத்து கைது செய்தனர். போலீசார் தன்னை அடையாளம் கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக மீசையை எடுத்துவிட்டு, பிகானேர் மாவட்டத்தில் சுற்றித்திரிந்ததாக தெரிகிறது.
இது குறித்து காவல்துறை அதிகாரி பாரத் சிங் ரத்தோர் கூறுகையில், "வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் தங்களது ஹோட்டலுக்குச் செல்லும் வழியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் வந்தது. அதன்படி விசாரித்ததில், அந்த சுற்றுலாப்பயணிகள் கடந்த 18 நாட்களுக்கு முன்பு ஜெய்ப்பூரில் தங்கியிருந்தபோது, டாக்சி ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்தார் என தெரியவந்தது. சுற்றுலாப்பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், விசாரணைக்காக ஜெய்ப்பூருக்கு அழைத்து வரப்படுவார்" என்றார்.