புதுச்சேரி 100 அடி சாலை பகுதியில் தனியார் மதுபான கடை செயல்பட்டுவருகிறது. கடந்த 16ஆம் தேதி இரவு கடையின் உள்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், கடையிலிருந்த ரூ. 1.50 லட்சம் பணம், ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள விலையுயர்ந்த மதுபாட்டில்களை திருடிச்சென்றனர்.
இச்சம்பவம் குறித்து, உருளையன்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திப்புராயபேட்டையைச் சேர்ந்த மனோகரன், செல்வகணபதி, பிரான்சிஸ் ஆகியோர் இத்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து குற்றவாளிகளைத் தேடிவந்த காவல் துறையினர், திருமால்நகர் பகுதியில் பதுங்கியிருந்த மனோகரனை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து விலையுயர்ந்த மதுபானங்கள், பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் செல்வகணபதி, பிரான்சிஸ் ஆகியோரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் 4 கிலோ தங்கம் கடத்தல்!