சஹாரன்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம், பெரோஸ்பூர் பகுதியைச் சேர்ந்த ராம்தான் என்பவர், தன் 15 வயது மகளை, அதே கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் என்பவர் காதல் வலையில் விழவைத்து கடத்திச்சென்று திருமணம் செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிந்து போலீசார், தலைமறைவான சந்தீப் மற்றும் மைனர் பெண் ஆகியோரைத் தேடி வந்தனர். தலைமறைவான இருவர் பற்றி தகவல் கிடைக்காத நிலையில், சந்தீப் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என போலீசார் அறிவித்தனர்.
இந்நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பின் போலீசார் வலையில் சந்தீப் சிக்கி உள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் சந்தீப் மற்றும் மைனர் சிறுமிக்கு 9 வயது மற்றும் 13 வயதில் இரு பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து போலீசார் கூறுகையில், திருமணம் முடிந்த கையோடு, சிறுமியை உத்தரகாண்டின் தேஹ்ரி பகுதிக்கு சந்தீப் அழைத்துச் சென்றுள்ளார். மேலும் இருவரும் தங்களது பெயர்களை மாற்றிக் கொண்டு புதிய பெயருடன் கூலி வேலை பார்த்து வாழ்ந்து வந்துள்ளனர்.
ரகசியத் தகவலின் பேரில் நடத்திய சோதனையில் சந்தீப் பிடிபட்டதாக போலீசார் தெரிவித்தனர். சந்தீப் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Kanjhawala death Case: டெல்லி அஞ்சலி மரண வழக்கு: முக்கிய சிசிடிவி வெளியீடு!