கொல்கத்தா (மேற்கு வங்கம்): மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை நேற்று (ஜூலை 7) விரிவாக்கம் செய்யப்பட்டது. 12 ஒன்றிய அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். 43 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்.
இதில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பாபுல் சுப்ரியோ, தெபஸ்ரி சவுத்ரி ஆகிய ஒன்றிய அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அதே சமயம், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 4 எம்பிக்கள் இணை அமைச்சர்கள் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
மோடிதான் முழுமுதற் காரணம்
அதில், "ஆட்சி நிர்வாகம் நடத்துவதில் ஒன்றிய அரசு தீவிரமாக இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. சுகாதாரத்துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டங்கள் அனைத்தும் பிரதமர் மோடி தலைமையில்தான் நடைபெற்றது.
ஆனால், இப்போது ஹர்ஷ்வர்தன் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார். அரசு மட்டும் தீவிரமாக செயல்பட்டிருந்தால், கரோனா இரண்டாவது அலையே இல்லாமல் இருந்திருக்கும்.
மோடி என்ன புனிதரா? பாபுல், தெபஸ்ரி சவுத்ரி ஆகியோர் திடீரென தவறு செய்துவிட்டதாக பாஜக மேலிடம் நினைக்கிறதா என்ன? அதனால்தான் அவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார்களா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: தகவல், ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன்!