ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், அங்கு மும்முனை போட்டி நடைபெறுகிறது.
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி என மூன்று முக்கிய தரப்புகள் இந்தத் தேர்தலில் களமிறகவுள்ளன. மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்ற பாஜக அசுர பலத்துடன் வேலை செய்துவரும் நிலையில், மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் முதலமைச்சர் மம்தா கடுமையாக விமர்சித்துவருகிறார்.
இவர்களின் சண்டை போலித்தனமானதுதான் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றஞ்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் தொங்கு சட்டப்பேரவை அமையும் பட்சத்தில் முதலமைச்சர் மம்தா பாஜகவுடன் கைகோர்ப்பார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்கனவே அங்கம் வகித்தவர்தான் மம்தா என சீதாராம் யெச்சூரி எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: 2021-இல் 14 திட்டங்கள் இலக்கு: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்