கொல்கத்தா (மேற்கு வங்கம்): அரசு விழாவில் ஜெய் ஸ்ரீராம் என்று கூச்சலிட்ட பாஜவினரால் கோபமடைந்து பாதியிலேயே தன் பேச்சை நிறுத்திவிட்டுச் சென்றார் முதலமைச்சர் மம்தா பானர்ஜி.
நேதாஜி பிறந்த நாளை பராக்கிரம தினமாக பின்பற்றப்படும் என்று அண்மையில் மத்திய அரசு அறிவித்திருந்தது. இச்சூழலில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125ஆவது பிறந்தநாள் விழா இன்று கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவிடத்தில் வைத்து அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இதில் பங்கேற்ற மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேச அழைக்கப்பட்டார். அப்போது அவர் இருக்கையில் இருந்து எழுந்து வரும் வேளையில், பாஜகவினர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கங்களை எழுப்பினர்.
இதில் கோபமடைந்த மம்தா, ‘இது கட்சி சார்பற்ற அரசு விழாவாகும். இதன் மரபை எக்காரணங்கள் கொண்டும் மீறுவது சரியல்ல. மரபற்ற பாஜகவினர் செயலுக்கு முன் நான் உரையாற்ற தயாராக இல்லை. ஜெய்ஹிந்த்; ஜெய் பெங்கால்’ என்று கூறி தனது இருக்கைக்கு சென்று அமர்ந்துகொண்டார்.
அரசு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி முன் மம்தா பானர்ஜி இப்படி நடந்துகொண்டது சரியல்ல என்று ஒருசாரார் கருத்து தெரிவித்திருக்கும் வேளையில், அரசு விழாவில் பாஜகவினர் இப்படியான முழக்கங்களை எழுப்புவது சரியா? என பலரும் சமூக வலைதளங்களில் கேள்வியெழுப்பியுள்ளனர்.