தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டது.
மேற்கு வங்கம் மாநிலத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மம்தா பானர்ஜியின் திருணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெருமான்மையை பெற்றுள்ளது. கடந்த திங்கட்கிழமை (மே 3) அன்று திருணாமுல் காங்கிரஸின் சட்டப்பேரவைக் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மம்தா, அன்று இரவே ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்நிலையில், மம்தா பானர்ஜி தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராக இன்று காலை 10.45 மணியளவில் ராஜ் பவனில் பதவியேற்கிறார்.
கரோனா பரவல் காரணமாக பதவியேற்பு விழா எளிமையாக நடைபெற உள்ளதாகவும், மம்தா பானார்ஜி மட்டும் முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவில் மேற்கு வங்கத்தின் மூத்தத் தலைவரான புத்ததேவ் பட்டாச்சார்யா, திருணாமூல் காங்கிரஸ் எம்.பி.,அபிஷேக் பானர்ஜி, திருணாமுல் தேர்தல் வியூக செயலாளர் பிரசாந்த் கிஷோர், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பீமன் போஸ், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்துல் மன்னன் ஆகியோர் மட்டும் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகளுக்கு பின் மேற்கு வங்கத்தில் பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதை அடுத்து மம்தா இன்று பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தொடரும் தாக்குதல்... மேற்கு வங்கம் செல்கிறார் பாஜக தலைவர் நட்டா