மேற்குவங்க மாநிலத்தின் தக்ஷின் தினாஜ்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானார்ஜி பங்கேற்று பேசினார். அப்போது அவர், வரும் மே 5ஆம் தேதிக்குப் பின் தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடையும்.
அதன் பின்னர் மாநிலத்திலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசிகள் இலவசமாகச் செலுத்தப்படும். தடுப்பூசிக்குத் தகுதியான அனைவருக்கும் இலவச தடுப்பூசியை மாநில அரசு ஆவண செய்யும், அதற்கான செலவை அரசே ஏற்கும் என்றார்.
மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில் படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் விநியோகம் உள்ளிட்டவற்றை அரசு தொடர்ந்து கண்காணித்து தேவையைப் பூர்த்தி செய்துவருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், அதன் முடிவுகள் வரும் மே 2ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.