பெங்களூரு : காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்தை கைப்பற்றுவதற்கோ, பிரதமர் பதவியிலோ ஆர்வம் இல்லை என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று (ஜூலை. 17) முதல் நாள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் இன்று (ஜூலை. 18) இரண்டாவது நாள் அலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஏறத்தாழ 25 கட்சிகளை சேர்ந்த 46 தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு வியூகம் வகுப்பது உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மகா கூட்டணிக்காக பெயர் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியை கைப்பற்றி அதிகாரத்திற்கு வருவதற்கோ அல்லது பிரதமர் பதவியிலோ ஆர்வம் கிடையாது என்றார்.
கடந்த மார்ச் மாதம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவின் போது சென்னையில் தான் ஏற்கனவே கூறியதாக தெரிவித்தார். அரசியல் அமைப்புச் சட்டம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி உள்ளிட்டவற்றை பாதுகாக்க வேண்டும் என்பது தான் காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என்றும் தனிச்சையாக செயல்பட வேண்டிய அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகளை எதிர்க் கட்சிகளுக்கு எதிரான ஆயுதமாக மாற்றி உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பல்வேறு கட்சி தலைவர்கள் மீது பொய்யான வழக்கு போடப்படுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய அரசியலமைப்பு அதிகாரங்கள் தனிச்சையாக பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். மேலும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க சட்டமன்ற உறுப்பினர்கள் மிரட்டப்படுகிறார்கள் அல்லது விலை பேசப்படுகிறார்கள் என்று மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
பெங்களூரு ஆலோசனைக் கூட்டத்தில் 26 கட்சிகள் ஒன்று கூடியுள்தாகவும், 11 மாநிலங்களில் ஆட்சியில் இருப்பதாகவும் கார்கே தெரிவித்தார். மேலும் பாஜக தனித்து 303 இடங்களில் வெற்றி பெறவில்லை என்றும் கூட்டணி கட்சிகளின் உதவிகளுடன் வெற்றி பெற்றதாகவு பின்னர் அதே கூட்டணி கட்சிகளை நிராகரித்ததாகவும் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்து உள்ளார்.
மாநில அளவில் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் இந்த வேறுபாடுகள் கருத்தியல் சார்ந்தது அல்ல என்றும் சாதாரண மக்கள் மற்றும் நடுத்த குடும்பத்தினர், இளைஞர்கள், ஏழைகள், சிறுபான்மையினர் உள்ளிட்ட அமைத்து தரப்பு மக்களின் உரிமைகள் நசுக்கப்படுவதை பார்க்கும் போது நம்முடைய பிரச்சனைகள் பெரியது அல்ல என்று மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள தேவையான திட்டங்கள் குறித்து, பெங்களூருவில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசித்ததாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : Opposition Coalition Name :எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு "இந்தியா" என பெயர்!