டெல்லி : மாலத்தீவு அதிபர் முகமது முய்சு ஜனவரி மாத இறுதியில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி கடந்த ஜனவரி 2ஆம் தேதி 2 நாள் பயணமாக லட்சத்தீவு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து தனது பயண அனுபவங்கள் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். பிரதமர் மோடியின் பதிவுக்கு மாலத்தீவு அமைச்சர்கள் பல்வேறு அவதூறு கருத்துகளை பதிவிட்டனர். மாலத்தீவு அரசின் அமைச்சர்கள் மல்ஷா ஷரீப், மரியம் ஷியூனா மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோர் வெளியிட்ட அவதூறு கருத்து சர்ச்சையாக வெடித்தது.
இதையடுத்து பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும், மாலத்தீவு அமைச்சர்களுக்கு எதிராகவும் பலர் சமூக வலைதளங்களில் போர்க் கொடி தூக்கத் தொடங்கினர். இதையடுத்து, பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட அமைச்சர்கள் மல்ஷா ஷரீப், மரியம் ஷியூனா மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோரை இடைநீக்கம் செய்து மாலத்தீவு அரசு நடவடிக்கை எடுத்தது.
மேலும், 3 அமைச்சர்களின் கருத்து தனிப்பட்ட கருத்துகள் என்றும் அது அரசு சார்ந்தது இல்லை என்றும் மாலத்தீவு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், மாலத்தீவை புறக்கணிக்கத் தொடங்கிய இந்திய மக்கள், அங்கு சுற்றுலா செல்ல முன்பதிவு செய்திருந்த அனைத்தையும் ரத்து செய்தனர்.
அதேபோல் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பிரபல தனியார் சுற்றுலா போக்குவரத்து நிறுவனங்களும் மாலத்தீவை ஊக்குவிக்கும் செயல்களை இனி பின் தொடரப்போவதில்லை என அறிவித்தனர். இதனால் மாலத்தீவு அரசுக்கு பொருளாதார நெருக்கடியும், இந்தியாவுடனான நட்புறவில் கடுமையான விரிசலும் ஏற்பட்டது.
இந்த பிரச்சினைகளுக்கு நடுவே சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். பொதுவாகவே இந்திய எதிர்ப்பு அரசியல் கொள்கைகளை கொண்டவர் முகமது முய்சு. தீவு நாட்டில் உள்ள இந்திய ராணுவத்தை வெளியேற்றுவது, இந்தியாவுக்கு முதலிடம் என்கிற கொள்கையை மாற்றுவது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியே முகமது முய்சு அதிபராக வெற்றி பெற்றார்.
இருப்பினும், இந்த விவகாரம் பூதாகரம் அடைந்த உள்ள நிலையில், முகமது முய்சுவின் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. முகமது முய்சு அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் போர்க் கொடி தூக்கி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவுடனான நட்புறவில் ஏற்பட்ட விரிசலை சரி செய்வதற்கும் இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் நோக்கிலும் விரைவில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜனவரி மாதம் இறுதியில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியா வருவார் என தகவல் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாலத்தீவு அதிபர் அலுவலகம், மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், மத்திய வெளியுறவு அமைச்சகம் இது குறித்து எந்த தகவலையும் உறுதிப்படுத்தவில்லை.
இதையும் படிங்க : மாலத்தீவு புறக்கணிப்பு! லட்சத்தீவுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுப்பு! சூட்சமம் என்ன?