டெல்லி: மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி, வரும் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை அரசுமுறைப் பயணமாக இந்தியா வரவிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் மாலத்தீவு அதிபர் வருகை தருவதாகவும், அவருடன் அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் வரவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின்போது, அதிபர் சோலி, இந்திய பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும், டெல்லியில் இந்திய வணிகக் குழுவுடன் கலந்துரையாடவுள்ளார் என்றும், டெல்லி மற்றும் மும்பையில் நடைபெறும் வணிக நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருநாட்டு தலைவர்கள் இடையேயான இந்த சந்திப்பு, இருநாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.