கோட்டயம்: கேரள திரையுலகில் முன்னணி இயக்குநராகவும், திரைக்கதை வசனகர்த்தாவாகவும் திகழ்ந்தவர் டென்னிஸ் ஜோசப் (63). கோட்டயத்தில் உள்ள ஏற்றமானூர் பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு மரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில், டென்னிஸ் ஜோசப்பை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர். தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த டென்னிஸ் ஜோசப், நேற்று (மே.10) மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
மலையாள சினிமாவில் மிகவும் வெற்றிகரமான திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கிய டென்னிஸ் ஜோசப், மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களாக விளங்கி வரும் மம்முட்டி, மோகன்லால் போன்ற பிரபல நட்சத்திரங்களுடனும் பணியாற்றியுள்ளார்.
மோகன்லாலின் பிளாக்பஸ்டர் படமான ’ராஜவிந்தே மாகன்’, மம்முட்டியின் ’நிரகூட்டு’ உள்ளிட்ட படங்களின் திரைக்கதை எழுத்தாளராக அவர் விளங்கியுள்ளார். மேலும், 40க்கும் மேற்பட்ட மலையாள சூப்பர் ஹிட் படங்களின் கதாசிரியராகவும் அவர் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து, 1988ஆம் ஆண்டு ’மனு அங்கல்’ படத்திற்கு தேசிய விருதை பெற்றார்.
டென்னிஸ் ஜோசப், மலையாள சினிமாவில் சிறந்த திரைக்கதை ஆசிரியராக அறியப்பட்ட இவர், கதை வசனத்தோடு பல படங்களையும் இயக்கியுள்ளார். அப்பு, மனு அங்கிள், அக்ராஜன், தொடர்கதா, அதர்வம் உள்ளிட்ட மலையாள மொழித் திரைப்படங்கள் இவரது இயக்கத்தில் வெளிவந்துள்ளன. தற்போது, டென்னிஸ் ஜோசப் உடலுக்கு மலையாளத் திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கேப்ரியெல்லாவைத் தொடர்ந்து பிக்பாஸ் ஆஜித்துக்கும் கரோனா பாதிப்பு!