பத்தனம்திட்டா :
மகர விளக்கு பூஜையின் போது சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் (திருவாபரணங்கள்) அடங்கிய 3 பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து ஐயப்ப பக்தர்கள் தலைச்சுமையாக எடுத்துச் சென்றனர்.
பந்தளத்திலிருந்து புறப்பட்ட திருவாபரண பவனி இன்று மாலை சரங்குத்தி வந்தடையும். இங்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு அலுவலர்களின் வரவேற்புக்கு பின் சன்னிதானத்துக்கு எடுத்து வரப்படும். மாலை 6:25க்கு 18ஆம் படி வழியாக சன்னதிக்கு வந்ததும் தந்திரியும், மேல்சாந்தியும் திருவாபரணத்தை பெற்றுக்கொள்வர்.
பின் நடை அடைத்து விக்ரகத்தில் ஆபரணங்கள் அணிவிப்பர். தொடர்ந்து நடைதிறந்து தீபாராதனை நடக்கும். தீபாராதனை முடிந்து சில வினாடிகளில் பொன்னம்பலமேட்டில் மகர நட்சத்திரம் காட்சி தரும். தொடர்ந்து மகர ஜோதி மூன்று முறை காட்சி தரும். மகரஜோதி நாளில் நடக்கும் முக்கிய பூஜைகளில் ஒன்று மகர சங்கராந்தி பூஜை.
சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்லும் நேரத்தில் ஐயப்பனுக்கு இந்தப் பூஜை நடத்தப்படுகிறது. இன்று மதியம் 2:29 மணிக்கு இந்த பூஜை நடந்தது. இந்த நேரத்தில் திருவிதாங்கூர் மன்னர்களின் அரண்மனையான கவடியாரில் இருந்து கொடுத்து விடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு பாத்திரத்தில் ஊற்றாமல், நேரடியாக விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது.
மகர விளக்கையொட்டி பக்தர்கள் சன்னிதானம், பம்பை உள்ளிட்ட 8 இடங்களில் இருந்து மகர ஜோதியை தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை மகரஜோதி தரிசனத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சபரிமலை நடை திறப்பு