பஞ்சாப் மாநிலம், மான்சா மாவட்டத்தில் உள்ள நரிந்தேர்புரா ரயில் நிலையத்திற்கு அருகே தண்டவாளம் இரண்டடி வரை சேதமடைந்திருந்தது.
இதை அலுவலர்கள் யாரும் கவனிக்காததால் ரயில் சேவை ஏதும் நிறுத்திவைக்கப்படவில்லை. இந்நிலையில் 05909 என்ற எண் கொண்ட அவாத்-அஸ்ஸாம் எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக நரிந்தேர்புரா ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது.
அப்போது ரயில் தண்டவாளம் சேதமடைந்திருப்பதை ரயிலை இயக்கியவர் பார்த்து நிலைமையை சுதாரித்துக் கொண்டு வண்டியை நிறுத்திவிட்டார்.
இதையடுத்து, ரயில்வே காவல் துறை, உள்ளூர் காவல் துறையினருக்கு தகவலளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு காவல் துறையினருடன் ரயில்வே தொழில் நுட்ப ஊழியர்களும் விரைந்து வந்தனர்.
இதையடுத்து தண்டவாள விரிசல் விரைந்து சரி செய்யப்பட்டது. ரயில் ஓட்டுநர் சரியான நேரத்தில் இதைக் கவனித்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குளிர்காலத்தில் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தால் இது போன்ற தொழில்நுட்ப சிக்கல் ஏற்படுவது இயல்பு என ரயில்வே அலுவலர் தெரிவித்தார்.