மும்பை: இந்திய ஆட்டோமொபைல் தொழில் துறையின் முன்னோடியும், மஹிந்திரா குழுமத்தின் முன்னாள் தலைவருமான கேசுப் மஹிந்திரா(Keshub Mahindra) இன்று (ஏப்ரல் 12) காலை மும்பையில் உள்ள அவரது வீட்டில் வயது மூப்பின் காரணமாக காலமானார். அவர் இதனை அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர் ஈடிவி பாரத் செய்திகளுக்கு உறுதிப்படுத்தி உள்ளார். 48 ஆண்டுகள் மஹிந்திரா குழுமத்தின் தலைவராக இருந்த கேசுப் மஹிந்திரா, ஆட்டோமொபைல் துறையில் இருந்து ஐடி, ரியல் எஸ்டேட், நிதி சேவைகள் மற்றும் விருந்தோம்பல் ஆகிய வணிகத்திலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
அதேபோல் வில்லிஸ் கார்ப்பரேஷன், மிட்சுபிஷி, இண்டர்நேஷ்னல் ஹார்வெஸ்டர், யுனைடெட் டெக்னாலஜிஸ் மற்றும் பிரிட்டிஷ் டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச வணிக கூட்டணிகளில் முக்கிய பங்கு வகித்தார். அமெரிக்காவில் உள்ள பென்ன்சிலுவேனியா பல்கலைக்கழகத்தில் உள்ள வார்டனில் பட்டம் பெற்ற கேசுப் மஹிந்திரா, 1974ஆம் ஆண்டு மஹிந்திரா குழுமத்தில் சேர்ந்தார். இதனையடுத்து 1963ஆம் ஆண்டில், அவர் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனார்.
64 ஆண்டுகளாக மஹிந்திரா மற்றும் மஹிந்திரா வாரியத்தின் இயக்குநர்களில் ஒருவராக மேற்பார்வையிட்டார். 2012ஆம் ஆண்டு, 15.4 பில்லியன் டாலர் பங்கீட்டு கொண்ட இரும்பு வர்த்தக கம்பெனியை, அப்போதைய மஹிந்திரா குழுமத்தின் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குநரும், தனது மருமகனுமான ஆனந்த் மஹிந்திராவிடம் ஒப்படைத்தார். மேலும் அவர், அதிகமான பொது மற்றும் தனியார்களின் வாரியம் மற்றும் கவுன்சில்களில் பணியாற்றி உள்ளார்.
ஹெச்யுடிசிஓ-வின் (HUDCO) நிறுவனத் தலைவராகவும் கேசுப் இருந்துள்ளார். SAIL, டாடா ஸ்டீல், டாடா கெமிக்கல்ஸ், இந்தியன் ஹோட்டல்ஸ், ஐஎப்சி, ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎப்சி ஆகிய கார்ப்பரேட் வாரியங்களிலும் பணியாற்றி உள்ளார். அது மட்டுமல்லாமல், எம்பிளாயர்ஸ் பெடரேஷன் ஆஃப் இந்தியாவின் தலைவராகவும், பம்பாய் வர்த்தகம் மற்றும் தொழில் துறையின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
மேலும் அவர், கம்பெனி சட்டம் மற்றும் சீர்திருத்தங்களுக்கான சச்சார் கமிஷன் மற்றும் பிரதமரின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை கவுன்சிலின் உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். அதேநேரம் அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம்-இன் தலைவராகவும் இருந்துள்ளார். மேலும், 1964ஆம் ஆண்டு எஸ்ஐஏஎம்-இன் (Society of Indian Automobile Manufacturers) தலைவராகவும் கேசுப் மஹிந்திரா பணியாற்றி உள்ளார்.
இந்த நிலையில் எஸ்ஐஏஎம் தலைவரான வினோத் அகர்வால் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “இந்திய ஆட்டோமொபைல் துறை, தனது முன்னோடிகளில் ஒருவரை இழந்துள்ளது. சர்வதேச அளவில் இந்திய ஆட்டோமொபைல் தொழில் துறை சிறந்து விளங்க, அவரது தலைமையிலான பயணம் முக்கிய பங்கை வகித்துள்ளது. இந்தியா, ஆட்டோமொபைல் பிரிவில் ஒரு உற்பத்தி மையமாகத் திகழ்வதற்கு, அவர் துணை புரிந்துள்ளார். ஒரு உண்மையான தொலைநோக்காளரின் மறைவிற்கு, எஸ்ஐஏஎம் மற்றும் இந்திய ஆட்டோமொபைல் தொழில் துறை தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மேலும், அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
அதேபோல் மஹிந்திரா குழுமத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் பவன் கொயென்கே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உயர்ந்த மனிதர்களில் ஒருவரை, தொழில் துறை இன்று இழந்துள்ளது. கேசுப் மஹிந்திராவுக்கு இணை இல்லை. நான் தெரிந்து கொண்டவர்களில், கேசுப் மிகவும் நல்ல மனிதர். அவர் எப்படி வணிகம், பொருளாதாரம் மற்றும் சமூக செயல்களை இணைத்தார் என்பது எனக்கு ஒரு உந்துதலாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Forbes : விட்டதை பிடிச்ச அம்பானி - உலக பணக்காரர்களில் தமிழருக்கு இடம்!