மகாராஷ்டி ரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 1997ஆம் ஆண்டு, வர்தா மாவட்டத்தில் உள்ள ஜாம் பகுதியிலிருந்து சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள வரோரா சாலை வரை பாலம் அமைக்கும் ஒப்பந்தம் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டது. அதன்படி, ஒப்பந்த நிறுவனம் 1998ஆம் ஆண்டு அக்டோபரில் 226 கோடி ரூபாய் செலவில் பணியை முடித்தது.
இதையடுத்து சாலையும், பாலமும் மத்திய பொதுப்பணித்துறைக்கு மாற்றப்பட்டதாக தெரிகிறது. இதனால், மகாராஷ்டிரா அரசு அதிகாரிகள் சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு பணிக்கான ஒப்பந்த தொகையை வழங்கவில்லை. இதையடுத்து தனியார் நிறுவன ஒப்பந்ததாரர் நீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கில் கடந்த 2004ஆம் ஆண்டு, ஒப்பந்ததாரருக்கு வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 71 லட்சம் ரூபாயை வழங்க கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், கீழமை நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பரில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இறுதியாக வேறு வழியில்லாமல் ஒப்பந்த தொகையை வட்டியுடன் சேர்த்து செலுத்த மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, 5 கோடியே 71 லட்சம் ரூபாய் தர வேண்டிய நிறுவனத்துக்கு, வட்டியுடன் சேர்த்து 300 கோடியே 3 லட்சத்து 62 ஆயிரம் ரூபாயை மகாராஷ்டிரா அரசு வழங்கவுள்ளது. அதேநேரம் இந்த ஒப்பந்த விவகாரத்தில் அரசுக்கு கோடிக்கணக்கில் நஷ்டத்தை ஏற்படுத்திய அதிகாரிகள் மீது விசாரணை நடத்தவும் மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க:டெல்லி இளம்பெண் கொலை: டூவீலரில் இருந்த மற்றொரு பெண் யார்? - பகீர் கிளப்பும் பின்னணி