கட்டடக்கலை உள்ளக வடிவமைப்பாளர் அன்வே நாயக் மற்றும் அவரது தாயார் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி, ஃபெரோஸ் ஷேக் மற்றும் நிதீஷ் சர்தா ஆகியோர் மீது வழக்கு பதிந்த மகாராஷ்டிரா காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
நவம்பர் 18ஆம் தேதிவரை தலோஜா சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள அர்னாபை, அவரது குடும்பத்தினர் சந்தித்து பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இந்நிலையில், அர்னாப் கோஸ்வாமியின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் குறித்து மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்குடன் அம்மாநில ஆளுநர் பகத் சிங் நேற்று தொலைபேசி வாயிலாக பேசியிருந்தார்.
அப்போது, அர்னாப் கோஸ்வாமியின் குடும்பத்தினருக்கு அவரை சந்தித்து பேச அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இன்று ஊடகங்களிடையே பேசிய மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்,"கோவிட்-19 தொற்றுநோய் பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக சிறைவாசிகளை, அவர்களது உறவினர்கள் சந்திக்க அனுமதி வழங்கப்படுவதில்லை.
மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி, கோஸ்வாமியின் உறவினர்களை சந்திக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
கோஸ்வாமியின் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் குறித்த அறிந்துகொள்ள சிறை அலுவலர்களின் அனுமதிப்பெற்று தொடர்பு கொள்ளலாம்" என தெரிவித்தார்.
மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பக்கம் துணை நிற்காமல் குற்றம்சாட்டப்பட்ட அர்னாப் கோஸ்வாமிக்கு துணை நிற்பதாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்துவருவது கவனிக்கத்தக்கது.