நவி மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பன்வெல் பகுதியில் கோழிகளை திருடுவதற்காக கிராமத்திற்குள் நுழைந்த மூன்று திருடர்கள் தடுக்க முயன்ற உரிமையாளரை கோடாரியால் வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இந்த திருடர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து பன்வெல் போலீசார் கூறுகையில், "மார்ச் 29ஆம் தேதி இரவு மூன்று கோழி திருடர்கள் ஷிவ்கர் கிராமத்துக்குள் நுழைந்துள்ளனர்.
அங்குள்ள வீடுகளில் கோழிகளை தேடி அலைந்தனர். அப்போது வினய் பாட்டீல் (19) என்பவரது வீட்டில் இருந்த கோழிகளின் பட்டியை திறந்தபோது, சத்தம் கேட்டு வினய் பாட்டீல் வெளியே வந்துள்ளார். அப்போது திருடர்களுக்கும் அவருக்கும் இடையே கைகலப்பானது. அதன்பின் திருடர்கள் அங்கிருந்து தப்ப ஓட்டம் பிடித்தனர். ஆனால், வினய் பாட்டீல் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்துக்கொண்டு அவர்களை துரத்திக் கொண்டு ஓடினார்.
கிராமத்துக்கு வெளிப்புறம் சென்ற உடன் திருடர்கள் ஒன்று சேர்ந்து, வினய் பாட்டீலை தாக்க தொடங்கினர். அவரிடம் இருந்த கோடாரியை பிடிங்கி அவரையே சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த வினய் பாட்டீல் சம்பவயிடத்திலேயே மயங்கி விழுந்தார். இவரை மீட்ட கிராம மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி மார்ச் 30ஆம் தேதி உயிரிழந்தார்.
இதனிடையே எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மருத்துவமனைக்கு விரைந்து அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தோம். இதுதொடர்பாக விசாரணை நடத்துகையில், பன்வெல் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்துவரும் 3 பேர் இரவில் கோழிகளை திருடுவதை வழக்கமாக வைத்துள்ளது தெரியவந்தது. உடனே அங்கு சென்று அவர்களை பிடித்து விசாரிக்கையில், அவர்கள் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்தோம். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளோம்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் கடத்தல் மன்னன் ராஜூ சுட்டுக்கொலை - யார் காரணம்?