நாசிக்: மகாராஷ்டிராவில் கணவர் இறப்பு குறித்து கேள்வி கேட்ட பெண்ணை உறவினர்கள் அடித்து துன்புறுத்தி செருப்பு மாலை அணிவித்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாசிக் மாவட்டம் சந்த்வாக் பகுதியைச் சேர்ந்த பெண்ணின் கணவர் அண்மையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அவர் உயிரிழந்த சமயத்தில் பெண் தனது அம்மா வீட்டில் இருந்துள்ளார். கணவர் மரணம் தொடர்பாக பெண்ணுக்கு தாமதமாக தகவல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இறுதி சடங்கிற்கு வந்த பெண், தன் கணவர் மரணம் குறித்து உறவினர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.
பெண்ணின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது சகோதிரிகள் மற்றும் உறவினர்கள் தெரிவித்தாக கூறப்படுகிறது. தன் கணவர் தற்கொலை செய்ய வாய்ப்பில்லை என்றும் கொலை செய்யப்பட்டதாக கூறி பெண், கணவர் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.
வாக்குவாதம் கைகலப்பிற்கு அடித்தளமிட்ட நிலையில், பெண் மற்றும் அவருடன் வந்த உறவினர்களை கணவர் வீட்டார் கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. பெண்ணின் முகத்தில் கருப்பு சாயத்தை பூசிய அவர்கள், அவருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர் முழுவதும் இழுத்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் கருப்பு சாயம் பூசி, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக இழுத்துச் சென்றவர்ளை போலீசார் தேடி வருகின்றனர். அதேநேரம் பெண்ணின் கணவர் மரணத்திற்கு என்ன காரணம் என விசாரித்து வருவதாக போலீசார் கூறினர்.
இதையும் படிங்க: பழங்குடி மக்களின் மேம்பாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடு : தேர்தல்களை குறிவைக்கும் பாஜக அரசு!