மகாராஷ்டிரா: புல்தானா மாவட்டத்தில் உள்ள சம்ருத்தி மகாமார்க் விரைவுச் சாலையில் பணித்த பேருந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் பயணிகள் 25 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் யவத்மாலில் இருந்து புனே நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று இன்று (ஜூலை 1) அதிகாலை 2 மணியளவில் சம்ருத்தி மகாமார்க் விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, புல்தானா அருகே தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 25 பயணிகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாகவும் அறிவித்து உள்ளார்.
இந்த விபத்து குறித்து முதலமைச்சர் அலுவலகத் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்த பயங்கர விபத்து குறித்து முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து தலா 5 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்து உள்ளார்.
விபத்து குறித்து கேள்விப்பட்டதும் முதலமைச்சர் வேதனை அடைந்தார். பின்னர் புல்தானா மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபத்து குறித்து முதலமைச்சர் பேசினார். மேலும், உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவும், சிகிச்சையின்போது ஏற்படும் செலவுகளை ஏற்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
மேலும், விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அவசர மருத்துவ சேவை குழுவினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கோர விபத்து குறித்து புல்தானா மாவட்ட டிஎஸ்பி பாபுராவ் மகாமுனி, “பேருந்தில் இருந்து 25 உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன. பேருந்தில் மொத்தம் 33 பேர் பயணம் செய்தனர். 8 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் புல்தானா சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்” என தெரிவித்தார்.
புல்தானா எஸ்பி சுனில் கடஸ்னே கூறுகையில், “பேருந்தில் மொத்தம் 33 பேர் பயணம் செய்தனர், அதில் 25 பேர் உயிரிழந்தனர் மற்றும் 8 பேர் காயம் அடைந்தனர். டயர் வெடித்து பேருந்து கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் உயிர் பிழைத்தார்.
முதற்கட்ட தகவலின்படி, பேருந்தின் டயர் வெடித்ததில், கட்டுப்பாடை இழந்த பேருந்து சாலையில் இருந்த டிவைடர், கம்பத்தில் மோதி உள்ளது. மேலும், மோதி விழுந்த பேருந்தில் உடனடியாக தீயும் பற்றியதால் விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது. விபத்தில் காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்” என தெரிவித்தார்.
பேருந்து டிவைடரில் மோதியதில் பேருந்தின் அச்சு முறிந்து சேஸியை விட்டு வெளியேறி விட்டது. பேருந்து விபத்துக்குள்ளான உடன் சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கியவர்கள் மீட்பதற்குள் பேருந்து தீ பிடித்து எரியத் தொடங்கியது. தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து விட்டது” என விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.